திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் இரண்டாம் (தெற்கு) பிரகாரத்தில் இக்கோயில் உள்ளது. திருவாரூர் பெரிய கோயிலே தேவாரப் பாடல் பெற்ற தலமாயினும், அதன் உள்ளே இருக்கும் இக்கோயிலுக்கும் தனி தேவாரப் பதிகம் உள்ளது. இங்குள்ள மூலவர் 'அரநெறியப்பர்' என்று வழங்கப்படுவதால் கோயிலும் 'ஆரூர் அரநெறி' என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் 'அசலேஸ்வரர்', 'அரநெறியப்பர்' என்னும் திருநாமங்களுடன், பெரிய லிங்க வடிவில் மேற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'வண்டார்குழலி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான நமிநந்தியடிகள் அவதரித்து, முக்தியடைந்த தலம். அவர் தினமும் அரநெறியப்பர் சன்னதியில் தினமும் விளக்கேற்றி தொண்டு புரிந்து வந்தார். ஒருசமயம் எண்ணெய் தீர்ந்து விடவே, கோயில் குளத்தில் இருந்து தண்ணீரை ஊற்றி தீபத்தை எரிய வைத்தார். அதனால் மூலவரும் 'அசலேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|